நவம்பர் 1ம் தேதி 1–8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்!

நவம்பர் 1ம் தேதி 1–8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்!

Updated : 03 - 10 - 2021  NYKVT 

திருச்சிராப்பள்ளி,
                    திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திரா, என்.என்.எஸ். திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்திய 75-வது ஆண்டு சுதந்திர தின ஓட்டம், நேற்று(02-10-2021) நடந்தது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் பழைய தபால் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவுதூண் பகுதியில் விழா நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓட்டப் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறும்போது:- தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்தமாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அனைத்து மாவட்டகல்வி அதிகாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர். ஆனால் முதல்வரோ இதில் குழந்தைகள் நலனே முக்கியம். ஆகவே பொது சுகாதாரத்துறையின் மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனைப்படியே பள்ளிகள் திறக்கப்படும் என கூறி அதன்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருவதால் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share it On

Review