விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை: திகைத்துப் போன திண்டுக்கல்!

விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை: திகைத்துப் போன திண்டுக்கல்!

Updated : 03 - 10 - 2021 / NYKVT 

               திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்லச்செல்ல பலத்த மழையாக மாறியது. சுமார் 40 நிமிடங்கள் இந்த மழை நீடித்தது. அதன் பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. சாரல், பலத்த மழை என மாறி, மாறி பல மணி நேரம் இந்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக திருச்சி சாலை, பஸ் நிலைய சாலை, ரெயில் நிலைய சாலை என நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது தண்ணீரில் சீறிப்பாய்ந்து வாகனங்கள் சென்றன. பலத்த மழை காரணமாக திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதி, தெய்வசிகாமணிபுரம் ஆகிய இடங்களில் சாலையோரத்தில் இருந்த 2 மரங்கள், 2 மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்தன. நல்லவேளையாக அப்போது அப்பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் பெரும் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
பின்னர் நேற்று காலையில் மேட்டுப்பட்டி, தெய்வசிகாமணிபுரம் ஆகிய பகுதிகளில் விழுந்து கிடந்த மரங்களை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர். மேலும் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களும் சீரமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் நடக்கும் போதே லேசான சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு படையினரும், மின்வாரிய ஊழியர்களும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் பழனி, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி திண்டுக்கல்லில் 78.8 மில்லி மீட்டர், நத்தத்தில் 107 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 564.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

Share it On

Review