"தமிழகத்தில் நடப்பது மோதி அரசின் அடிமை ஆட்சி" - புதுவை முதல்வர் நாராயணசாமி !
Updated : 28-01-2020 / Vinayak
தமிழ்நாட்டில் நடப்பது மோதி அரசின் அடிமை ஆட்சி என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாகர்கோயில் முதல் சென்னை வரை பல இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கு பெற்றனர். பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்தும், மத்திய அரசால் மாநில அரசுகள் தொடர்ந்து பல திட்டங்களால் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "நீட் தேர்வுக்கு எதிராக, புதுச்சேரி மாநில அரசு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. அடுத்த படியாக மொழிக் கொள்கை குறித்து ஏற்பட்ட சர்ச்சையின் போது மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்து அதை அமல்படுத்த மாட்டோம் என்று முடிவெடுத்தோம். ஆனால், தமிழகத்தில் இருந்து எதற்கும் குரல் கொடுத்ததில்லை, இதன் மூலம் தமிழகத்தில் எப்படி அடிமையாட்சி நடக்கிறது என்பது தெரிகிறது. மத்திய நரேந்திர மோதி அரசு, தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து வஞ்சிக்கிறது. மீனவர் பிரச்சினை, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தல் போன்றவற்றை தொடர்ந்து. நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற எந்த விஷயமாக இருந்தாலும் மத்திய அரசின் விருப்பத்தை இங்கே செயல்படுத்துகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோதி அரசு மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து, வாக்குகளுக்காக அரசியல் செய்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவோம். கண்டிப்பாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் ஒரு மனதாக முடிவு செய்ய உள்ளோம். ஆனால், பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டமானது நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறி இருக்காது, அவர்கள் வாக்களித்ததால் இன்று இந்தியாவே பற்றி எரிகிறது" என்று குறிப்பிட்டார் நாராயணசாமி.
அத்துடன் "மதசார்பற்ற அணிகள் விழிப்போடு இருந்தால்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும், ஏற்கனவே ஒரு சுதந்திரப் போராட்டத்தை சந்தித்துவிட்டடோம். இப்போது நரேந்திரமோதி அரசை வீட்டிற்கு அனுப்புவதற்கு, இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில்,"நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து வந்த நிலையில், தற்போது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளை பொதுப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு எடுக்கும் முயற்சியானது மாநில உரிமைகள் மற்றும் அதிகாரத்தை பறிக்கும் செயல், இதை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்"என தெரிவித்தார்.
Review