ஜூம் செயலியின் 2வது பெரிய சந்தையாக மாறியுள்ள இந்தியா

 ஜூம் செயலியின் 2வது பெரிய சந்தையாக மாறியுள்ள இந்தியா


UPDATED / 8.8.2020/ /NYKV/ 23.28

பெங்களூரு,

அமெரிக்காவுக்கு பிறகு பிரபல ஜூம் செயலியின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது. அதன் காரணமாக ஜூம் நிறுவனம் பெங்களூரில் அலுவலகம் தொடங்க உள்ளதாக அதன் துணை நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான எரிக் யுவான் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்தன. அப்போது அமெரிக்க வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் உலகளவில் பிரபலமடைந்தது. அதேசமயம் ஹேக்கர்களின் தாக்குதலுக்குள்ளானதால் இச்செயலி சர்ச்சையிலும் சிக்கியது.

இந்நிலையில் இந்திய இணைய தினம் 2020 என்ற நிகழ்வில் ஜூம் செயலியின் துணை நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான எரிக் யுவான் இந்திய தொழிலதிபர் ஒருவருடன் கலந்துரையாடினார்.
இந்தியா எங்கள் இரண்டாவது பெரிய சந்தை. அதற்காக நாட்டிலுள்ள பயனர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவுக்கு பிறகு மிகப்பெரிய சந்தையாக இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. அதுமட்டுமின்றி எங்கள் நிறுவனத்தின் முக்கிய ஊழியர்கள் பலர் இந்திய வம்சாவளியினர்.
அபர்னா பாவா, தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக உள்ளார். தயாரிப்பு மற்றும் பொறியியல் தலைவராக வேல்சாமி சங்கரலிங்கமும், கார்பரேட் தலைமை தகவல் அதிகாரியாக சுனில் மதனும் பொறுப்பு வகிக்கின்றனர்.

வெப்எக்ஸின் துணை நிறுவனர் சுப்ரா ஐயர், ஜூமின் ஆலோசகர் மற்றும் முதலீட்டாளராக உள்ளார். இந்தியாவில் டெலிமெடிசனுக்காக ஜூம் செயலியை சிறப்பாக பயன்படுத்துக்கின்றனர். ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர்வது மற்றொரு சிறந்த பயன்பாடு ஆகும். இது தவிர, இந்தியாவில் ஜூம் மூலம் நிறைய யோகா மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. ஜூம் மூலம் நடக்கும் திருமணங்களும் பிரபலமாகி வருகின்றன. அமெரிக்காவில் நடக்கும் ஜூம் திருமணங்கள் தற்போது சட்டப்பூர்வமாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மறைந்த பின்பும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கும் என எண்ணுகிறேன். 2040 வாக்கில் வீடியோ கம்யூனிகேஷன் நெருக்கமாக உணரச் செய்யும். கைக்குலுக்கலாம், அவர்களது இருப்பை உணரலாம். நீங்கள் வைத்திருக்கும் காபியை நான் ஒரு கிளிக்கில் இங்கிருந்து வாசம் பிடிக்கலாம். எதிர்காலம் இப்படி தான் இருக்கும் என எரிக் யுவான் கூறியுள்ளார்.

Share it On

Review