இமயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்?ரஜினிகாந்த் பேட்டி

இமயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்?ரஜினிகாந்த் பேட்டி

Updated : 23-11-19 / Vinayak

‘ரஜினிகாந்த்...’ தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டு காலமாக முதலிடத்தில் கோலோச்சிக் கொண்டு இருக்கும் நடிகரின் பெயர் மட்டுமல்ல, தமிழக அரசியலை அடுத்தடுத்து பரபரப்பு களத்தில் வைத்திருக்கும் ஒரு மனிதரின் பெயர். இவரின் ஒரு நிமிட பேச்சு... பல விவாதங்களுக்கு சுழி.

 

கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய வாழ்க்கை பயணம், சினிமா, குடும்பம் குறித்து மிக சுவாரசியமாக தூர்தர்ஷனுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

 

கேள்வி:-40 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறீர்கள், உங்கள் ஸ்டைல் எல்லோரையும் கவருகிறதே? எப்படி?

 

பதில்:-சில நேரங்கள் நினைத்த மாத்திரத்தில் அதுவாக (ஸ்டைல்) வரும். ஆரம்பத்தில் வில்லனாக நடித்தேன். வில்லன் கதாபாத்திரத்தை பொறுத்தவரை வித்தியாசமாக இருக்க வேண்டும். அதில் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். அதற்காக வெவ்வேறு ஸ்டைல்கள் உருவாக்கினேன். எந்த விஷயம் செய்தாலும் அதை ரசித்து செய்ய வேண்டும்.

 

கேள்வி:-சினிமாவில் உச்சத்தில் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

பதில்:-நான் இயல்பாக இருக்கிறேன். மற்றவர்களை போலவே நான் வாழ்கிறேன்.

 

கேள்வி:-உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் என்று யாரை கூறுவீர்கள்?

 

பதில்:-நான் இந்த அளவு உயர்ந்ததற்காக எனது பெற்றோருக்கும், கடவுளுக்கும் என்னுடன் பணியாற்றிய இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 

கேள்வி:-உங்கள் வாழ்வின் திருப்பு முனை என்று எதை கருதுகிறீர்கள்?

 

பதில்:-எனது வாழ்க்கையில் இயக்குனர் பாலசந்தரை சந்தித்தது தான் பெரிய திருப்பு முனை. நடிப்பு பயிற்சி எடுத்தபோது தமிழ் தெரியாது. பாலசந்தர் நம்பிக்கை அளித்து நடிக்க வைத்தார். தமிழ் கற்றுக்கொள் உன்னை எங்கு கொண்டு போய் சேர்க்கிறேன் பார் என்று சொன்னார். அபூர்வ ராகங்கள் படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் கிடைத்தது. மூன்று முடிச்சு படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். நான் கதாநாயகன் ஆவேன் என்று அப்போது நினைக்கவில்லை.

 

கலைஞானம் தான் பைரவி படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இந்தி படத்திலும் நடித்து இருக்கிறேன். மொழி தெரியாததால் சிரமங்கள் இருந்தன. பெங்களூருவில் வசிப்பவர்களுக்கு மூன்று மொழிகள் தெரியும். எனக்கு கூடுதலாக மராத்தியும் தெரியும்.

 

கேள்வி:-உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் எது?

 

பதில்:-ராகவேந்திரா படம் எனது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

கேள்வி:-அடிக்கடி இமயமலைக்கு செல்கிறீர்களே? ஏன்?

 

பதில்:-புத்துணர்வு பெறுவதற்காகவே ஒவ்வொரு முறையும் இமயமலை செல்கிறேன்.

 

கேள்வி:-ரசிகர்கள் உங்கள் மீது வெறித்தனமான அன்பை வைத்து இருக்கிறார்களே? உங்களை அதிசயமாக பார்க்கிறார்களே?

 

பதில்:-ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு என்ன திருப்பி கொடுக்க முடியும் என்பது தெரியவில்லை. அதனாலேயே ஒவ்வொரு படத்தையும் அவர்களுக்கு சிறந்த படமாக கொடுக்க விரும்புகிறேன்.

 

கேள்வி:-சினிமாத்துறைக்கு புதியதாக வரும் இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

 

பதில்:-அவர்கள் வேலையை விரும்பி செய்ய வேண்டும்.

 

கேள்வி:-உங்கள் வாழ்வில் பெரிய உத்வேகமாக யாரை கருதுகிறீர்கள்?

 

பதில்:-அமிதாப்பச்சன்.

 

கேள்வி:-குடும்ப உறவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

 

பதில்:-(சிரிக்கிறார்) கேமராவுக்கு பின்னால் கூட நாம் நடிக்க வேண்டியிருக்கும். ஆனால், நன்றாக நடிக்க வேண்டும்.

 

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Share it On

Review