‘ஒரு லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்’ - ஐபிஎம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Updated : 05-08-19 / Vinayak
சான்பிரான்சிஸ்கோ:
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் கடந்த சில ஆண்டுகளில் ஒரு லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஐபிஎம். உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 3,50,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும் தொழில்போட்டி, வருவாய் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் நெருக்கடியை இந்நிறுவனம் சந்தித்து வருகிறது.
இதையடுத்து வயதான அதிக சம்பளம் பெறும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து புதிய ஊழியர்களை பணி அமர்த்தி வருகிறது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றிய சில ஊழியர்கள் தாங்கள் தவறான முறையில் பணிநீக்கம் செயயப்பட்டதாக கூறி சான் பிரான்சிஸ்கோ, டெக்ஸ்சாஸ் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.
டெக்ஸாஸ் நீதிமன்றத்தில் முன்னாள் ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஐபிஎம் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் ஆலன் வில்டு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘அமேசான், கூகுள் உட்பட பிற நிறுவனங்களை போல தற்போதைய சூழலுக்கு ஏற்றவகையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் எங்கள் பணியாளர்களை மாற்றி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் வீதம் புதிதாக ஆட்களை தேர்வு செய்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Review