கோயம்பேடு சந்தையை தொடக்கத்திலேயே மூடாதது ஏன்?- அதிகாரிகள் விளக்கம்
Updated by Vinayak - 08/05/2020
கோயம்பேடு சந்தையை தொடக்கத்திலேயே மூடாதது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து சிறப்பு அதிகாரிகள், சிஎம்டிஏ மற்றும் சந்தை நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
தொடக்கம் முதலே அரசின் அறிவுறுத்தல்கள் குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை ஒழுங்குபடுத்த போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சந்தையில் விற்கப்படுவதுவீடுகளுக்கு அன்றாடம் தேவைப்படும்அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள். இருப்பினும் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற தொடக்கத்திலேயே திட்டமிடப்பட்டது. அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு இடத்தில் அவர்கள் கடைகளை நடத்த மறுத்தால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் இடமாற்றம் செய்யப்படவில்லை.
சிறு வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளே நுழைய தடை விதித்தால், அதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பை அறிவிக்கின்றனர். தொற்று அதிகமான நிலையில், சந்தை இடமாற்றத்தை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
இந்த சந்தையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், நடைபாதை கடைகள் மற்றும் வழியை ஆக்கிரமித்து போடப்பட்ட கடைகள், ஆங்காங்கே குவிந்து கிடந்த குப்பைகள் ஆகியவைதான். அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
ஊரடங்கு அமலில் இருக்கும்போது, பொதுமக்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், மக்கள் கூட்டம் சந்தையில் அலைமோதியது. நோய் பரவலுக்கு இதுவும் ஒரு காரணம். இவற்றை எல்லாம் தவிர்த்திருந்தால், இடமாற்றம் செய்யவேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Review