தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!
Updated on: 04-07-19 / Vinayak
அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.கவுக்கு, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி தலைவராக பொறுப்பேற்றார். சுமார், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவின் தலைவராக கருணாநிதி இருந்துவந்தார். தி.மு.கவின் தலைவராக கருணாநிதி இருந்த காலத்திலேயே, மு.க.ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கருணாநிதியின் காலம் வரையில், உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவில் எந்தப் முக்கியப் பொறுப்பிலும் இருந்தது இல்லை. கட்சி தொடர்பான பணிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பெரிதும் ஆர்வம் காட்டியதில்லை. இந்தநிலையில், கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எதிர்கொண்ட மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்சாரகராக உதயநிதி ஸ்டாலின் வலம் வந்தார்.
அதற்கு முன்னரும், கிராம சபைக் கூட்டத்துக்கு சென்று நேரடியாக மக்களைச் சந்தித்துவந்தார். இந்த மக்களவைத் தேர்தலின்போது, உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்தநிலையில், தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், இளைஞரணிச் செயலாளராக இருந்த மு.பொ.சாமிநாதன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழகம் முழுவதுமுள்ள தி.மு.க தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றன.
தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவிவகித்தார். தி.மு.கவைப் பொறுத்தவரை, இளைஞரணிச் செயலாளர் பதவி என்பது மிகவும் அதிகாரம் வாய்ந்த பொறுப்பாகும்.
Review